கோலாலம்பூர், செப்டம்பர்.22-
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தியதற்காக மரணத் தண்டனை விதிக்க தீர்ப்பு அளிக்கப்பட்ட ஒரு மலேசியப் பிரஜையான கே. தட்சணாமூர்த்திக்கு வரும் வியாழக்கிழமை சாங்கி சிறைச்சாலையில் மரணத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
தட்சணாமூர்த்தியின் மரணத் தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து சட்டப் போராட்டங்களும் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலையில் தட்சணாமூர்த்திக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலை அறிவித்துள்ளது.
இதனை தட்சணாமூர்த்தியின் முன்னாள் வழக்கறிஞரான எம். ரவி தெரிவித்தார். அந்த மலேசிய இளைஞருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்படும் தேதி குறித்து சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலை கடிதம் வாயிலாக தமக்கு தெரியப்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர் ரவி குறிப்பிட்டார்.
மரணத் தண்டனைக்குக் காத்திருக்கும் தட்சணாமூர்த்தியை அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கடைசியாக பார்ப்பதற்கு சாங்கி சிறைச்சாலை வருகையாளர் நேரத்தை வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை நீடித்துள்ளதாக ரவி தெரிவித்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் 44.96 கிராம் diamorphine போதைப்பொருளைக் கடத்தியதற்காக கைது செய்யப்பட்ட தட்சணாமூர்த்திக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.








