சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கி வரும் மாதம் 30 ரிங்கிட் பொதுப் போக்குவரத்து மானியமானது, தற்போது கேடிஎம் கொமுட்டர் சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் நகர்வு குழுத் தலைவர் ங் ஸீ ஹான் கூறுகையில், ஆரம்பத்தில் ரெபிட் கேஎல் ஓன்-டிமாண்ட் மற்றும் கும்பூல் (Kumpool) சேவைகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்த மானியம், தற்போது கேடிஎம் கொமுட்டர் பயணிகளுக்கும் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மானியம் பெற்றவர்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் ரெபிட் கேஎல் ஓன்-டிமாண்ட் Rapid KL சேவையைத் தேர்வு செய்திருந்தனர்.
அவர்களில் 26 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் 35 விழுக்காட்டுடன் அதிக எண்ணிக்கையிலான பயனர்களாக இருந்தனர்.
இந்நிலையில், கேடிஎம் கொமுட்டரைத் திட்டத்தில் இணைப்பதன் மூலம் சிலாங்கூரில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு கூடுதல் பயன் கிடைப்பதுடன், பொதுப் போக்குவரத்து வலையமைப்பை மேலும் அதிகமானோர் பயன்படுத்த ஊக்குவிக்க முடியும் என ங் ஸீ ஹான் தெரிவித்துள்ளார்.








