புத்ராஜெயா, அக்டோபர்.09-
பிரிமியம் காட்டன் டவல் என லேபலிடப்பட்ட துணிப் பெட்டிகளைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கத் தயார் நிலையில் இருந்த 98.03 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள கஞ்சாப் பூ கடத்தல் முயற்சியை மலேசிய சுங்கத்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் தொடங்கி, அக்டோபர் மாதம் முற்பகுதி வரை மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் பெரியளவில் போதைப் பொருள் கடத்துவதற்கான முயற்சிகள் நடந்துள்ளன என்று விமான நிலையத்தின் சுங்கத்துறை இயக்குநர் ஸுல்கிஃப்லி முகமட் தெரிவித்தார்.
தங்க முக்கோணப் பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப் பொருளை, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்பு, அவற்றைப் பொட்டலமாகக் கட்டி, பெட்டிகளில் அடுக்கி பட்டுவாடா செய்யப்படுவதற்கு மலேசியாவை ஒரு தளமாக அனைத்துலக போதைப் பொருள் கும்பல், பயன்படுத்தி வந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
உளவுத்துறை தந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு விமான நிலையத்தின் கார்கோ பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அனைத்துக கும்பலின் இந்த தந்திர செயல் அம்பலமானதாக அவர் மேலும் கூறினார்.








