கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-
பாலஸ்தீன விடுதலையை ஆதரிப்பதில் மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டைத் தொடர்ந்து அந்நிய நாட்டு அச்சுறுத்தல்கள் அதிகரித்த போதிலும், நாட்டின் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
காஸா மற்றும் பாலஸ்தீனப் பிரச்சனைகளில் அதிகக் குரல் எழுப்புவதில் அரசாங்கமும் பிரதமரும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால், உண்மையில் அவர் தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் கண்காணிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார் என்று அரசாங்கப் பேச்சாளரான டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
உணர்ச்சிகளால் இயக்கப்படாத மலேசியாவின் கொள்கை ரீதியான நிலைப்பாடு தற்போது நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
எந்தவோர் அச்சுறுத்தலையும் சாதாரணமாகக் கருதாமல், பாதுகாப்பின் அனைத்து அம்சங்களும் முறையாகக் கையாளப்படுவதை உறுதிச் செய்ய, தேசிய பாதுகாப்பு மன்றம் அவ்வப்போது விளக்கங்களை வழங்கி வருவதாக டத்தோ ஃபாமி மேலும் கூறினார்.








