காஜாங், நவம்பர்.23-
காஜாங் - சிரம்பான் சாலையில் ஓட்டுநர் உரிமம் இன்றி கார் ஓட்டிய ரோஹிங்கியா அகதி ஒருவருக்கு நேற்று போக்குவரத்துத் துறை அபராதம் விதித்தது. ஐக்கிய நாடுகள் அகதிகள் அட்டை வைத்திருக்கும் 27 வயதுடைய அந்த நபர், உரிமம் இல்லாத நிலையிலும், தனது முதலாளியின் காரில் பொருட்கள் வாங்கச் சென்றதாகக் கூறியுள்ளார்.
உரிமம் இல்லாத ஓட்டுநருக்கும், வாகனத்தின் உரிமையாளருக்கும் சம்மன் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அக்காரை 1987ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் மேலதிக நடவடிக்கைகளுக்காக செமிஞி ஜேபிஜே நிலையத்திற்குப் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில சாலைப் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் அஸ்ரின் பெர்ஹாட் தெரிவித்தார். அனைத்து சாலை விதிகளும் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்ய ஜேபிஜே தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த புகார்களைத் தெரிவிக்கலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.








