Sep 23, 2026
Thisaigal NewsYouTube
தீயணைப்புத் துறை உரிமக் கடிதம் வழங்குவதில் முறைகேடு / அதிகாரி மீது இரண்டு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன
தற்போதைய செய்திகள்

தீயணைப்புத் துறை உரிமக் கடிதம் வழங்குவதில் முறைகேடு / அதிகாரி மீது இரண்டு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன

Share:

சுங்கை பட்டாணி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் பணியாற்றிய தீயணைப்புத் துறை கண்காணிப்பாளர், 40 வயதான ஜோஹாரி பார் அஸ்வார் தீயணைப்புத் துறையின் உரிம ஆதரவு கடிதம் பெற்றுத் தருவதற்காகக் கூறி மொத்தம் 11 ஆயிரத்து 500 லஞ்சம் பெற்றதாக அவர் மீது அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

முதல் குற்றச்சாட்டின்படி, கெஜுருதேரான் யூனியன் லங்காவி செண்டிரியான் பெர்ஹா நிறுவன உரிமையாளர் காவ் கோன் அன் என்பவரிடமிருந்து, நிறுவனத்திற்கு உரிம ஆதரவு கடிதம் பெற்றுத் தருவதற்காக 1,500 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கடந்த 2024 -ஆம் ஆண்டு, ஏப்ரல் 4-ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் அமன்ஜெயா மால், சுங்கை பட்டாணி அருகிலுள்ள யாஸ்மீன் உணவகதில் பின்புறத்தில் நடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாவது குற்றச்சாட்டின் படி, ஜின் ஹுவா தோங் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவன உரிமையாளர் லிம் ஜான் சியான் என்பவரிடமிருந்து, ஜின் ஹுவா தோங் செண்டிரியான் பெர்ஹாட் மற்றும் மெகாமாஜு செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனங்களுக்கு உரிம ஆதரவு கடிதம் பெற்றுத் தருவதற்காக 10 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில், சுங்கை பட்டாணி பகுதியில் உள்ள தாமான் ரியா ஜெயா தொழிற்துறை பகுதியிலுள்ள நிறுவன வளாகம் முன்பு நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி அமைப்புகளிடமிருந்து தொழில் உரிமம் பெறுவதற்கு முன், தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தும் தீயணைப்புத் துறையின் உரிம ஆதரவு கடிதம் அவசியமாகும்.

ஜோஹாரி பார் அஸ்வார் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டம் 2009-இன் பிரிவுகள் 17(a) மற்றும் 16(a)(b)-ன் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், லஞ்சத் தொகையில் ஐந்து மடங்கு அல்லது 10 ஆயிரம் ரிங்கிடில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படலாம்.

இதனிடையே நீதிமன்றத்தில் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்த ஜோஹாரி பார் அஸ்வார் , விசாரணை கோரியதையடுத்து, அடுத்த விசாரணை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News