இஸ்கண்டார் புத்ரி, செப்டம்பர்.19-
பகடிவதைச் சம்பவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தேவையான சட்டங்களை வரைவது தொடர்பில் மக்களின் கருத்துகள் கண்டறியப்படும் என்று சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்தார்.
மக்களின் கருத்துகளைக் கண்டறியும் பொருட்டு தற்போது நாடு தழுவிய நிலையில் மக்கள் பங்கேற்கும் டவுன்ஹால் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு மக்கள் குறிப்பாக, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் சார்ந்த தரப்பினர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அஸாலினா தெரிவித்தார்.
பள்ளிகளில் நிகழும் பகடிவதைச் சம்பவங்களுக்கு தீர்வு காண்பதற்கு தற்போது ஆசிரியர்கள் நிறைய கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். பகடிவதைத் தடுப்பு சட்டம் எவ்வாறு இருந்தால் அது மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வல்லதாக இருக்கும் என்று ஆசிரியர் பெருந்தகைகள், ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
காரணம், பகடிவதைச் சம்பவங்களால், தார்மீக பொறுப்பேற்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஆசிரியர்களிடம் இருப்பதால் இவ்விவகாரத்தைக் கையாளும் முறை குறித்து பல்வேறு பரிந்துரைகளை அவர்கள் வழங்கி வருகின்றனர்.
எனவே ஒரு வலுவான சட்டத்தை இயற்றுவதற்கு முன்னதாக மக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.








