ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.21-
குவாந்தான், 10-ஆவது மைல் ராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 22 வயதான கே. இந்திரன் என்ற பயிற்சி வீரரின் திடீர் மரணம் குறித்து பொதுமக்கள் யாரும் வீண் வதந்திகளையோ, குழப்பங்களையோ ஏற்படுத்த வேண்டாம் என அவ்வீரரின் தாயார் உஷா வலியுறுத்தியுள்ளார்.
தனது மகன் இராணுவத்தில் பகடி வதை செய்யப்பட்டோ, சித்திரவதை செய்யப்பட்டோ மரணமடையவில்லை என்றும், சவப்பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் எந்த ஒரு காயங்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திரன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்த போது மிகவும் அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் சவப்பரிசோதனையில் அவருக்கு எந்த ஓர் அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் உஷா தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இந்திரனின் உடல்நிலையானது மிகவும் ஆரோக்கியமானதாக இருந்த நிலையில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, முடிவுகள் வெளி வரும் வரையில் காத்திருக்கப் போவதாகவும் அவர் விவரித்துள்ளார்.
அதுவரையில், ஆயுதப்படையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் யாரும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் இன்று காலை தாமான் ஶ்ரீ நிபோங்கில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திரனின் உடலை ஏற்றிக் கொண்டு வந்த இராணுவ வாகனம், அதிகாலை 1.45 மணியளவில் அவரது இல்லத்தை அடைந்தது.
தற்போது இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இந்திரனின் உடலானது, இன்று பிற்பகல் 2 மணியளவில் பத்து லஞ்சாங் இந்திய கல்லறையில் உள்ள அவரது தந்தையின் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு, டிசம்பர் 21 ஆம் தேதி, இந்திரனின் தந்தை மேஜர் சி. காயம்பு, பயணம் செய்த Beechcraft B200T வகை விமானம், பட்டர்வொர்த் விமானத் தளத்திற்குள் விழுந்து நொறுங்கியதில் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








