கோலாலம்பூர், நவம்பர்.07-
தொடக்கப்பள்ளிகளில் யுபிஎஸ்ஆம் மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் PT3 போன்ற தேர்வுகளைக் கல்வி அமைச்சு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஆசிரியர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார்.
மாணவர்களின் தரமான கல்வி அடைவு நிலையை உறுதிச் செய்வதற்கு இது போன்ற தேர்வுகள் மறுபடியும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஆசிரியரான டத்தோ முகமட் ஷாரிஸால் சம்சுடின் வலியுறுத்தினார்.
முக்கியத் தேர்வுகள் அகற்றப்பட்டதன் விளைவுவாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர், நடப்புச் சூழலைக் கையாள முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கு முன்பு தேர்வு என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்ததால், அவர்கள் ஊக்கத்துடன் படிக்க வேண்டும் என்ற ஓர் உந்துதல் இருந்தது.
பிள்ளைகளின் கல்வி ஊக்க நடவடிக்கைகளிலும் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்தினர். ஆசிரியர்களும் பள்ளியின் கல்வி அடைவு நிலை சரிந்து விடக்கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக மாணவர்களின் கல்வி அடைவு நிலையை உயர்த்த அதிக சிரத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயம் இருந்தது.
அரசாங்கத்தின் அத்தகைய முக்கிய தேர்வுகள் அகற்றப்பட்ட பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள வகுப்பறை மதிப்பீட்டு கல்வி அடைவு முறை, முந்தைய அரசாங்கத் தேர்வுகளைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டு உள்ளது. அது போட்டி சவாலை உருவாக்கவில்லை.
குறிப்பாக, மாணவர்கள் அதிக நேரம் செலவிட்டு கருத்தூன்றி படிக்கும் முறையை வகுப்பறை மதிப்பீட்டு தேர்வு ஊக்குவிக்கவில்லை. கல்வி இலக்கை அடைவதற்கு மாணவர்கள் மத்தியில் இருந்த ஆரோக்கியமான போட்டா போட்டி தற்போது இல்லை.
பரீட்சை இல்லாத மாணவர்களின் கல்வி அடைவு நிலை, அவர்களைக் கற்றல், கற்பித்தலில் கரை சேர்க்க உதவாது. எனவே யுபிஎஸ்ஆர் போன்ற தேர்வுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதே பெயரைப் பயன்படுத்தாவிட்டாலும் மாற்றுப் பெயர்களில் அது அரசாங்கத் தேர்வாக இருக்க வேண்டும் என்று டத்தோ முகமட் ஷாரிஸால் வலியுறுத்தியுள்ளார்.








