Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சிறப்பின் உச்சம் உறவைத் தேடி 2025 ஒன்று கூடும் நிகழ்வு
தற்போதைய செய்திகள்

சிறப்பின் உச்சம் உறவைத் தேடி 2025 ஒன்று கூடும் நிகழ்வு

Share:

காப்பார், ஜூலை.24-

காப்பார், மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியைக்ஹ் தளமாக கொண்டு 1979 இல் எஸ்எம்ஜேகே இடைநிலைப்பள்ளியில் கல்வியை முடித்துக் கொண்ட 1963 ஆம் ஆண்டில் பிறந்த முன்னாள் மாணவர்கள் தங்களின் உறவைத் தேடி….. அமைப்பின் வாயிலாக 2025 ஆம் ஆண்டுக்கான ஒன்றுகூடல் நிகழ்வை கடந்த ஜுலை 19 ஆம் தேதி சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடத்தினர்.

ஜாலான் காப்பார், 7 ஆவது மைல், எஸ்எம்வி வெட்டிங் பேக்கெஜ் ஹிகா இவெண்ட் ஹால் மண்டபத்தில் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெற்ற உறவைத் தேடி 2025 ஆம் ஆண்டுக்கான ஒன்றுகூடும் நிகழ்வு, அதன் தலைவர் என். இளங்கோவன் தலைமையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

காப்பார், மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் தங்களுக்கு கல்வியைப் போதித்த முன்னாள் ஆசிரியரும், கல்வி அமைச்சின் முன்னாள் ஆய்நர் செ. தென்னரசு மற்றும் இன்ஸ்டிடியூட் அமினுடின் பாக்கி கல்விக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் மு. மனோகரன் ஆகியோர் சிறப்புப் பிரமுகர்களாகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

உறவைத் தேடி…. இயக்கத்தில் உள்ள முன்னாள் மாணவர்களிடையே நட்புணர்வைப் புதுப்பித்துக் கொள்வதற்கும், தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதற்கும், தங்களின் வருடாந்திர ஒன்று கூடும் நிகழ்வைப் பல்வேறு பசுமையான - சுவாரஸ்யமான நினைவுகளுடன் 62 வயது அகவையை எட்டியுள்ள இயக்கத் தோழர்கள் மற்றும் தோழிகள் ஒன்றிணைந்து முன்னெடுத்தனர்.

பல்வேறு குடும்பப் பின்னணியிலிருந்து வந்த முன்னாள் மாணவர்கள், காலச் சக்கரத்தில் இந்த 46 ஆண்டுகளில் பல்வேறு பாதைகளாகப் பிரிந்து இருந்தாலும், ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தச் சந்திப்பில், வேடந்தாங்கல் பறவைகளைப் போல் அனைவரும் ஒன்றிணைந்து, அன்பைப் பரிமாறிக் கொள்வது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று உறவைத் தேடி… இயக்கத்தின் தலைவர் இளங்கோவன் தமது உரையில் தெரிவித்தார். அத்துடன் மகிழ்வைத் தெரிவிக்கும் வண்ணம் அனைவரும் கேக் வெட்டி மகிழ்ந்தனர்.

விருந்து உபசரிப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் மாணவி புஷ்பராணி, நீரின் முக்கியத்துவத்தை விளக்க, அனைவருக்கும் அன்பளிப்பாக நீர் பானத்தை வழங்கினார். இந்தச் சந்திப்பின் உச்சமாக, உடல் உபாதைக்கு ஆளாகியுள்ள ரவாங்கைச் சேர்ந்த 7 வயது ஹெப்ஸிபா சாம்சனின் மருத்துவ செலவிற்கு அவரின் பெற்றோரிடம் இயக்கம் சார்பில் அதன் தலைவர் இளங்கோவன் கணிசமான தொகையை வழங்கி, நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்தார்.

Related News