Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சக பல்கலைகழக மாணவி மீது எரிதிரவக வீச்சு, இந்திய மாணவி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சக பல்கலைகழக மாணவி மீது எரிதிரவக வீச்சு, இந்திய மாணவி மீது குற்றச்சாட்டு

Share:

கிளந்தான், மே 09-

தனக்கு நன்கு அறிமுகமான சக பல்கலைகழக மாணவி மீது எரிதிரவகம் வீச்சு நடத்தியதாக ஓர் இந்திய மாணவி, கிளந்தான், கோத்தா பாரு செஷனஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

ஜோகூரைச் சேர்ந்த A. கீர்த்தனா நாயுடு என்ற 22 வயதுடைய அந்த பல்கலைகழக மாணவி, நீதிபதி நிக் ஹப்ரி முகமது முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

ஜொகூர், பாகோ- விலுள்ள பல்கலைகழகம் ஒன்றின் மாணவியான கீர்த்தனா நாயுடு -விற்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சக மாணவி மீது எரிதிரவம் வீச்சு நடத்தியது மற்றும் தனது இருப்பிடமான ஜொகூரிலிருந்து எரிதிரவகத்தை கொண்டு வந்து, தன் வசம் வைத்திருந்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகள் கீர்த்தனா நாயுடு -விற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த, மே 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.23 மணியளவில் கிளந்தான், குபாங் கெரியன்- னில் உள்ள USM பல்கலைகழகத்தின் சுகாதார பிரிவு வளாகத்தில் பாதுகாப்பு இலாகா அறையில் கீர்த்தனா நாயுடு இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அப்பல்கலைகழகத்தின் மாணவியான 22 வயதுடைய நூருல் ஹுஸ்னா ரஹீம் என்பவர் மீது நடத்தப்பட்ட இந்த எரிதிரவக வீச்சினால் சம்பந்தப்பட்ட மாணவி ஆசிட் சல்ஃப்ரிக் வகையைச் சேர்ந்த எரிதிரவகம் உடலில் பட்டு கடும் தீக்காயங்களுக்கு ஆளானதாக குற்றச்சாட்டில் விவரிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 ஆவது பிரிவின் கீழ் மாணவி கீர்த்தனா நாயுடு இந்த கடும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

சக மாணவி மீது எரிதிரவக வீச்சு நடத்துவதற்கு கீர்த்தனா நாயுடு பயன்படுத்திய ஆசிட், மிக ஆபத்தான எரிதிரவகமாகும். அதனை தன் வசம் கொண்டு, சக மாணவிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இக்கொடூரச் செயலை புரிந்த கீர்த்தனா நாயுடு -விற்கு ஜாமீன் அனுமதிக்கப்படக்கூடாது என்று பிராசிகியூஷன் தரப்பில் ஆஜரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அஹ்மத் ஃபைஸ் ஃபித்ரி முகமது நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

எனினும், குற்றச்சாட்டப்பட்டுள்ள மாணவி கீர்த்தனா நாயுடு ஒரு பல்கலைக்கழக மாணவி என்பதால், அவருக்கு ஜாமீன் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜீசி நோர்டின் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள இரு மாணவிகளும் தோழிகள் ஆவர். இருவரும் மெட்ரிக்குலேஷன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் மட்டுமின்றி ஒரே அறையில் தங்கியிருந்தவர்கள் ஆவர்.

தவிர, இரு மாணவிகளின் குடும்பத்தினரும் நன்கு அறிமுகமானவர்கள் ஆவர். இந்நிலையில் அந்த மாணவி, தனது பல்கலைகழகப் படிப்பை தொடர வேண்டியிருப்பதால் அவருக்கு ஜாமீன் அனுமதிக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் அஜீசி நோர்டின் தமது வாதத்தில் கேட்டுக் கொண்டார்.

இரு தரப்பின் வாதங்களை செவிமடுத்த நீதிபதி நிக் ஹப்ரி முகமது, மாணவி கீர்த்தனா நாயுடுவை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 20 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு அனுமதி அளித்தார். அதே வேளையில், மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து