கோலாலம்பூர், அக்டோபர்.16-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட தயார் நிலைக்கு ஏற்ப ஏரோடிரேன் செயல்படத் தவறினால் விமான நிலையத்தை வழிநடத்தி வரும் Malaysia Airports Holdings Berhad – க்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நினைவுறுத்தினார்.
போக்குவரத்து அமைச்சில் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் Abad ( அபாட் ) எனப்படும் தரைமார்க்க போக்குவரத்து ஏஜென்சியின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
தரைமார்க்கம் தொடர்புடைய அனைத்து போக்குவரத்து முறைகளையும், கண்காணிக்கவும், உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அபாட் உச்ச அதிகாரம் கொண்டு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் விமானமுனையங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லவும், கொண்டு வரவும் இணைப்பு போக்குவரத்தாக கருதப்படும் ஏரோடிரேன் சேவை விதிவிலக்க அல்ல என்று அந்தோணி லோக் விளக்கினார்.
எனவே விமான நிலையத்தை வழிநடத்தி வரும் நிறுவனம் என்ற முறையில் ஏரோடிரேன் சேவைத் தரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருவது MAHB என்ற அழைக்கப்படும் Malaysia Airports Holdings Berhad- டின் கடமையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.








