கூலிம் மாவட்டத்தில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 55 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் மாஹிர், ஓப்ஸ் பெலாஞ்சா, ஓப்ஸ் மிஞ்ஞாக் மற்றும் ஓப்ஸ் செலேரே நடவடிக்கைகளில் 21 குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தொழிற்சாலைகள், உணவகங்கள், கார் கழுவும் நிலையங்கள் உள்ளிட்ட 9 வளாகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மொத்தம் 236 பேர் பரிசோதிக்கப்பட்டதில், 146 பேர் மலேசியர்கள் என்றும் 90 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரியவந்தது. அவர்களில் 43 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் என 55 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் மியான்மர், வங்காளதேசம், நேபாளம், பாகிஸ்தான், இந்தோனேசியா, சீனா மற்றும் குடியுரிமையற்றவர்கள் அடங்குவர். அவர்கள் மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்காக கெடா, சிக், பெலாந்திக் குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.








