பெட்டாலிங் ஜெயா, நவம்பர்.21-
கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, டாமான்சாரா உத்தாமா இடைநிலைப்பள்ளியில் நான்காம் படிவ மாணவி ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 14 வயது மாணவனின் மனநல சோதனைக் காலத்தை நீட்டிக்கும்படி மருத்துவமனை செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
நாட்டின் முன்னணி மனநல மருத்துவமனையான பேரா, தஞ்சோங் ரம்புத்தான், பஹாகியா மனநல மருத்துவமனை செய்து கொண்ட பரிந்துரைக்கு ஏற்ப அந்த பதின்ம வயதுடைய மாணவனின் பரிசோதனைக் காலத்தை நீட்டிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளிப்பதாக மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.
அந்த மாணவனுக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்னதாக அவனின் மனநல நிலை குறித்த மதிப்பீடும் சோதனையும் மிக முக்கியமாகும்.
இதனை அடிப்படையாகக் கொண்டே சட்டத்தின் அம்சங்களையும், குற்றச்சாட்டின் தன்மையையும் ஆராய முடியும் என்று மாணவனின் வழக்கறிஞர் கிட்சன் ஃபூங் தெரிவித்தார்.








