கோலாலம்பூர், அக்டோபர்.06-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் பிரதமர் முகமட் ஷெபாஸ் ஷாரிஃப், மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.
நேற்று இரவு 9.46 மணியளவில், சிறப்பு விமானம் மூலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வருகை புரிந்த அவரை, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் வரவேற்றார்.
ஷெபாஸ் உடன் பாகிஸ்தான் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் முகமட் இஷாக் டார் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் வருகை புரிந்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும், ராயல் மலாய் படைப் பிரிவின் அரச மரியாதை அணிவகுப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை பிரதமர் அன்வாரைச் சந்திக்கவுள்ள முகமட் ஷெபாஸ் ஷாரிஃப், மலேசியா, பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம், கல்வி, சுற்றுலா உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளார் என்று விஸ்மா புத்ரா அறிக்கை வெளியிட்டுள்ளது.








