சிரம்பான், செப்டம்பர்.12-
போர்ட்டிக்சன், சுங்கை லிங்கி மேம்பாலத்தில் ஆறு, எட்டு வயதுடைய இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் அந்த இரண்டு சிறார்களுக்கு மரணம் விளைவித்ததாக தந்தை ஒருவர், சிரம்பான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
46 வயது அப்துல் ரஹ்மான் மாஹ்மூட் என்ற அந்த நபர், நீதிபதி சுரிதா பூடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி போர்ட்டிசன், தஞ்சோங் ஆகாஸ், சுங்கை லிங்கி மேம்பாலத்திற்கு அருகில் சிறார்களான தனது மகனுக்கும், மகளுக்கும் மரணம் விளைவித்ததாக குற்றவியல் சட்டம் 304 ஆவது பிரிவின் கீழ் அந்த நபருக்கு எதிராக நோக்கமில்லாக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை அந்த நபர் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபர், காரை ஆற்றோரத்தில் நிறுத்தி விட்டு, காருக்கு வெளியே சிகரெட் புகைத்துக் கொண்டு இருந்த போது, கார் சொந்தமாக நகர்ந்து, ஆற்றில் விழுந்தததாக போலீசாரின் பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காரில் இருந்த ஒரு பெண்மணியை பொதுமக்கள் காப்பாற்றிய வேளையில் அந்த இரண்டு சிறார்களும் காருடன் நீரில் அடித்து செல்லப்பட்டதில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








