இஸ்ரேலிய பிரஜைகள் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம், வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, மலேசியாவுடனான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மலேசியாவுக்கான அமெரிக்க ராணுவப் பயிற்சி நிதியை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் எட்டு ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று ஜூலை 21ஆம் தேதி, வெளியுறவுத்துறை செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், ஒகையோ மாநில காங்கிரஸ் உறுப்பினர் கிரெக் லேண்ட்ஸ்மேன் தலைமையிலான குழு, மலேசியா இஸ்ரேலை அங்கீகரிக்காத நிலைப்பாடு கவலைக்குரியது என்றும், இஸ்ரேலியர்களை அவர்களின் குடியுரிமையின் அடிப்படையில் நாடு கடத்துவதாக பிரதமர் வெளிப்படையாகக் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளது.
அக்கடிதத்தில் அந்நாட்டு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
மலேசிய ராணுவத்தினருக்கு தொழில்முறை பயிற்சி வழங்கும் அனைத்துலக இராணுவக் கல்வி மற்றும் பயிற்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உதவிகளை அமெரிக்கா வழங்கி வருவதாகவும், இந்த உதவிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இஸ்ரேலிய பயங்கரவாத எதிர்ப்பு ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் பயிற்சி பெற்றதாக குற்றஞ்சாட்டிய அவர்கள், "யூதர்களைக் குறி வைப்பதன் மூலம் பயங்கரவாதிகளை வரவேற்பதாக" மலேசிய அரசை விமர்சித்துள்ளனர்.
அமெரிக்காவின் உதவி ஆதரவும் தொடர வேண்டுமெனில், தனது நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலின் குடிமக்களை மலேசியா குறிவைக்கக் கூடாது என்பதை பிரதமர் அன்வார் தலைமையிலான அரசாங்கத்துக்கு அமெரிக்கா தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்தக் கொள்கை 15 நாட்களுக்குள் மாற்றப்படாவிட்டால், ஐ.எம்.இ.டி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை இடைநிறுத்த வேண்டும் என்றும், இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
ஜொகூர் மாநிலம், பாரஸ்ட் சிட்டி பகுதியில் உள்ள நெட்வொர்க் ஸ்கூல் எனப்படும் தனியார் குடியிருப்பு தொழில்நுட்ப சமூகம், வேறு நாடுகளின் கடப்பிதழ்களை பயன்படுத்தி இஸ்ரேலியர்கள் கலந்து கொண்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, இஸ்ரேலிய குடிமக்கள் கண்டறியப்பட்டால் நாடுகடத்தப்படுவார்கள் என்று அன்வார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








