மைஇஜி செர்விசஸ் நிறுவனம் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய முழு நிலுவைத் தொகையையும் முதலில் செலுத்த வேண்டும். அதன் பின்னரே செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மைஇஜி மற்றும் ஸெட்ரிக்ஸ் ஏஐ ஆகிய நிறுவனங்கள், சாலைப் போக்குவரத்துத் துறையின் வசூல் முகவர்களாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த மே 19 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வசூலித்த ரிங்கிட் 314 மில்லியனை அரசாங்கத்திடம் ஒப்படைக்கத் தவறியதால், அவற்றின் சேவைகள் கடந்த 5ஆம் தேதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு அரசாங்கம் 35 முறை நினைவூட்டல்கள் வழங்கியதுடன், கடந்த மே மாதம் முதல் பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டதாக அந்தோணி லோக் தெரிவித்தார். நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்ட பின்னரே அடுத்தகட்ட விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.








