ஜோகூர் பாரு, ஜனவரி.28-
ஜோகூர், கோத்தா திங்கி, பெங்கெராங், ஜாலான் சுங்கை கப்பல், தாமான் பாயு டாமாய் பகுதியில் சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள கரிம மண் தீயை அணைக்க மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, 21 முறை வான்வழியாகத் தண்ணீரை ஊற்றி மொத்தம் 33,000 லிட்டர் தண்ணீரை வெளியேற்றியுள்ளது.
இன்று நண்பகல் 12.30 மணிக்குத் தொடங்கிய முதற்கட்ட நடவடிக்கை, ஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் நீடித்ததாக வான்வழிப் பிரிவு செயல்பாட்டு மேலாண்மைத் தலைவர் முகமட் ருஸைடி ரம்லி தெரிவித்தார்.
தரைப்படை வீரர்கள் எளிதில் சென்றடைய முடியாத மையப் பகுதிகளான செக்டர் D மற்றும் E ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையில் தீ எரிவது மற்றும் பலமான கடல் காற்று வீசுவது போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை சவாலாக அமைந்ததோடு, விமானப் பாதுகாப்பு அபாயத்தையும் அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்தக் கட்ட நடவடிக்கையில், மேலும் 40 முறை 50 ஆயிரம் லிட்டர் தண்ணீரை ஊற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 1,590 லிட்டர் கொள்ளளவு கொண்ட "பாம்பி பக்கெட்" (Bambi bucket) பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது.
இன்று நண்பகல் நிலவரப்படி, பாதிக்கப்பட்ட 99.55 ஹெக்டேர் பரப்பளவில் 54.8 விழுக்காட்டுத் தீ அணைக்கப்பட்டுள்ளது. வான்வழி இயந்திரங்களின் பயன்பாடு, குறிப்பாக அணுக முடியாத கரிம மண் பகுதிகளில் தீயை விரைவாகக் கட்டுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








