கோலாலம்பூர், நவம்பர்.24-
மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி ஏற்பாட்டில் பாதுகாப்பான இணையப் பிரச்சாரம், 2025 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 8 ஆயிரம் பள்ளிகள் மற்றும் கல்விக்கழகங்கள் ஆகியவற்றின் இலக்கை முறியடித்ததுடன் அந்த எண்ணிக்கையை தாண்டியுள்ளது என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 20 ஆம் தேதி நிலவரப்படி, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, 8 ஆயிரத்து 216 பள்ளிகள் மற்றும் கல்விக் கழகங்களில் இத்தகைய பிரச்சாரத்தை நடத்தியுள்ளதாக டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 58 பள்ளிகளில் இணையப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சாரங்கள் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இணையப் பாதுகாப்பு பிரச்சாரத்தை இன்னும் மேம்படுத்துவது தமக்கு முக்கியமானப் பணிகள் என்று குறிப்பிட்ட டத்தோ ஃபாமி, நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்விக்கழகங்களில் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தமது முக்கிய இலக்காக இருந்து வருகிறது என்றார்.
கோலாலம்பூர், லெம்பா பந்தாயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியச் சமூகத்திற்கான இணைய மோசடிச் சம்பவங்கள் மீதான விழிப்புணர்வு கருத்தரங்கை நிறைவு செய்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஃபாமி இதனைத் தெரிவித்தார்.
இணையப் பகடிவதைக்கு அப்பாற்பட்ட நிலையில் இணைய மோசடிகள் மற்றும் குழந்தைகள் பாலியல் சம்பங்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பிரச்னைகளைக் கையாளுவதற்கு இணையப் பாதுகாப்பு பிரச்சாரம் முக்கியமாகக் கருதப்படுகிறது என்று அமைச்சர் விளக்கினார்.








