ஷா ஆலாம், ஜூலை.30-
சிலாங்கூர் மாநிலத்தில் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதே தமது தலையாயக் கடமையாகும் என்று சிலாங்கூர் மாநிலத்திற்கு புதிய போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ ஷாஸேலி காஹார் உறுதிப் பூண்டுள்ளார்.
மக்களின் பாதுகாப்பு, அவர்களின் நல்வாழ்வு ஆகிய இரண்டு முக்கிய விவகாரங்களுக்குத் தாம் அதீத கவனம் செலுத்தப் போவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் என்ற முறையில் முதல் முறையாக வெளியிட்ட செய்தியில் டத்தோ ஷாஸேலி காஹார் தெரிவித்துள்ளார்.
தம்முடைய இந்த முயற்சியும், உறுதிப்பாடும் வெற்றி பெறுவதற்கு சிலாங்கூர் மாநில மக்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக டத்தோ ஷாஸேலி காஹார் குறிப்பிட்டார்.
ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தலைமைப் பொறுப்பை ஏற்ற டத்தோ ஷாஸேலி காஹார் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
டத்தோ ஷாஸேலி காஹார், இதற்கு முன்பு கோலாம்பூர் அரச மலேசிய போலீஸ் படையின் கல்லூரியில் கமாண்டன் பொறுப்பை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








