கோலாலம்பூர், ஆகஸ்ட்.23-
முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்புடைய உள்ளடக்கங்களைத் தடுக்கும்படி தாம் உத்தரவிட்டதாகக் கூறப்படுவதை தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் மறுத்துள்ளார்.
தாம் அவ்வாறு செய்ததாக டத்து பெந்தான் அலாமின் என்பவர் தனது முகநூலில் கூறியிருப்பது அவதூறானதாகும் என்று டத்தோ ஃபாமி விளக்கினார்.
அந்த முகநூல் கணக்கர் கூறியிருப்பது போல் தாம் எந்த சமயத்திலும் அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்கவில்லை என்றும் அது தொடர்பாக அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் டத்தோ ஃபாமி தெளிவுபடுத்தினார்.
இவ்விவகாரத்தில் தமக்கு எதிராக அவதூறு கூறியிருக்கும் நபருக்கு எதிராக போலீசில் புகார் செய்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தங்களின் சுயநலத்திற்காக மனம் போன போக்கில் அவதூறுகளை அள்ளித் தெளிப்பதை அனைத்து தரப்பினரும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கப் பேச்சாளரான டத்தோ ஃபாமி கேட்டுக் கொண்டார்.








