ஜோகூர் பாரு, செப்டம்பர்.25-
ஜோகூர் பாருவில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் ஒரு காதல் ஜோடி உட்பட மூவர் கைது செய்யப்பட்டது மூலம் தாமான் டெலிமா 2 இல் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் செயல்பட்டு வந்த போதைப் பொருள் விநியோகிப்புக் கும்பலைப் போலீசார் முறியடித்துள்ளனர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் ஆர்ஷாட் தெரிவித்தார்.
இதன் மூலம் 35 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள பல வகையான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்காகப் போதைப் பொருளை விநியோகிக்கும் நடவடிக்கையில் அந்த காதல் ஜோடி ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு 10.35 மணியளவில் ஜோகூர் பாரு, தாமான் செந்தோசாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்த காதல் ஜோடி பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து எக்ஸ்டசி வகையைச் சேர்ந்த போதைப் பொருள் என்று நம்பப்படும் மூன்று போத்தல்களில் 1.5 லிட்டர் திரவம் கைப்பற்றப்பட்டது. தாமான் செந்தோசாவில் ஜாலான் சுதெரா 3- இல் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் ஓர் உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டதுடன் மேலும் பல போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டது. அந்த நபர் வேதியியலாளர் என்பது தெரிய வந்துள்ளது என்று டத்தோ அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.








