உலகளாவிய நிலையில் போட்டியிடும் ஆற்றலுக்கு மலேசியர்களுக்கு வலுசேர்க்கக்கூடிய ஆங்கில மொழி போதனா முறை அகற்றப்பட்டது நாட்டிற்கு மிகப்பெரிய பேரிழப்பாகும் என்று கல்வியியல் ஆய்வாளரும், சமூகவாதியுமான நோர் அசிமான் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
பள்ளிகளில் மலாய்மொழியை பலப்படுத்தும் நோக்கில் ஆங்கில மொழி போதானா முறை முற்றாக அகற்றப்பட்டது, மலேசிய கல்வி முறையிலும், மாணவர்களின் திறனாற்றலிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மலேசிய கல்வி முறைக்கான பெற்றோர் நடவடிக்கை மன்றத் தலைவருமான நோர் அசிமான் குறிப்பிடுகிறார்.
மலேசியாவும், இந்தியாவும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளாகும். ஒரே காலனித்துவ ஆட்சியில் இருந்த இரு நாடுகளின் தலையெழுத்து, சுதந்திரத்திற்கு பிறகு கல்வி முறையில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையினால் வெவ்வேறு திசைகளில் மாறிக் கிடக்கின்றன என்று ஒரு தலைசிறந்த கல்வியாளருமான நோர் அசிமான் சுட்டிக்காட்டினார்.
பிரிட்டிஷார் விட்டுச் சென்ற ஆங்கில மொழி கல்விக் கொள்கையை இந்தியா திடமாக பற்றிக்கொண்டது. கணிதம், அறிவியல் பாடங்களில் பயிற்று மொழியாக ஆங்கிலத்தை நிலைநிறுத்திக்கொண்டது. ஆனால், மலேசியாவோ ஆங்கிலத்தை புறக்கணித்து விட்டு, அவற்றை மலாய்மொழியில் போதிக்கும் நடைமுறையை கொண்டு வந்தது.
பல்கலைக்கழகங்களில் பயில்கின்ற மாணவர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு தடுமாறுகின்றனர். இது நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பாகவே தாம் கருதுவதாக Stakeholders with Shireen எனும் நிகழ்வில் நோர் அசிமான் தெரிவித்துள்ளார்.








