Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கணவன் தேவராஜு கொலை மனைவி அஞ்சலை தேவிக்கும்,  அவரின் தம்பி விஜயனுக்கும் தூக்கு - ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

கணவன் தேவராஜு கொலை மனைவி அஞ்சலை தேவிக்கும், அவரின் தம்பி விஜயனுக்கும் தூக்கு - ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Share:

20 லட்சம் வெள்ளிக்கு மேற்பட்ட சொத்துகளை அடைவதற்காக பார்வையிழந்த தனது கணவரை மிக கொடூரமாக கொலை செய்வதற்கு திட்டம் வகுத்து, உடந்தையாக இருந்த 45 வயது மனைவி ஜி.எஸ் அஞ்சலைதேவிக்கும், அவரின் 42 வயது தம்பி ஜி.எஸ் விஜயனுக்கும் ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த கொலையில் இருவரும் குற்றம் இழைத்துள்ளனர் என்பதை பிராசிகியூஷன் தரப்பு ஆதாரத்துடன் நிருபித்துள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி அஸ்புல்லா அடாம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட நபரின் 18 வயது மகள் அளித்த சாட்சியம் இவ்வழக்கில் முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

சொந்த கணவனையே கொலை செய்வதற்கு தூண்டுதலாக இருந்த மனைவி, சொந்த மாமனையே கொலை செய்வதற்கு துணை நின்ற மைத்துனன் என்ற நிலையில் யாருமே சற்றும் எதிர்பார்க்க நெருங்கிய உறவினர்களே ஓர் அப்பாவியை கொலை செய்வதற்கு காரணமாக இருந்துள்ளார்கள். இவ்விருவருக்கும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தூக்குத் தண்டனையை விதிப்பதை தவிர தமக்கு வேறு வழியில்லை என்று நீதிபதி அஸ்புல்லா அடாம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

பார்வையிழந்த ஒரு மாற்றுத் திறனாளியான 59 வயது ஆர். தேவராஜு என்பவரை சுத்தியால் உயிர் போகும் வரை தலையிலேயே அடித்து மிக கொடூரமாக கொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்ததாக ஜி.எஸ் அஞ்சலைதேவியும், அவரின் தம்பி ஜி.எஸ் விஜயனும் .இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.

இவ்விருவரும் இக்குற்றத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி மதியம் 12 மணியளவில் காஜாங், கம்போங் பாரு சுங்கை சுவா, பிகேஎன்எஸ் சீப் ஹவுஸ் பிளாக் ஏ, லோரோங் ஜாதி யில் உள்ள தங்கள் வீட்டில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது

தேவராஜுவை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த இவ்விருவரும் பின்னர், அந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டில் திருத்தம் செய்யப்பட்டது.

தமது கணவருக்கு சொந்தமான 20 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான சொத்துக்களை பறிக்க வேண்டும் என்ற பேராசையில் அஞ்சலை தேவி தமது கணவரை சுத்தியால் அடித்துக் கொல்வதற்கு தமது தம்பியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News