கோலாலம்பூரிலிருந்து, இந்தியா, திருச்சியை நோக்கி நேற்று இரவு புறப்பட்ட ஏர் ஆசியாவிற்கு சொந்தமான ஏகே 23 விமானம், மீண்டும் கோலாலம்பூருக்கே திரும்பியது. 180 பயணிகள் கொண்ட அந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசர சிகிச்சைக்காக விமானம் மீண்டும் கோலாலம்பூருக்கே திரும்ப வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இலக்கானது.
இச்சம்பவம் நேற்று இரவு 11.25 மணியளவில் மலாக்கா நீரீணையை கடந்த நிலையில் இந்தோனேசியா, மேடான் வான்போக்குவரத்து பாதையில் நிகழ்ந்தது. நேற்று இரவு 8.45 மணிக்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் ஆசியா விமானம், இந்திய நேரப்படி இரவு 10.00 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தது. விமானம், திருச்சியை நோக்கி, சுமார் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது பயணி ஒருவருக்கு திடீரென்று மாடைப்பு ஏற்பட்டதாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானத்தை மேடானுக்கு திருப்புவதற்கு விமானி முடிவு எடுத்த நிலையில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து சிகனல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானத்தை கோலாலம்பூருக்கே திருப்புவதற்கு விமானி முடிவு செய்தார்.
விமானம், மலேசிய நேரப்படி அதிகாலை ஒரு மணியளவில் சிப்பாங், கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான நிலையத்தில் ஏற்கனவே காத்திருந்த மருத்துவ உதவிக்குழுனரிடம் அந்தப் பயணி ஒப்படைக்கப்பட்டடார்.
பின்னர் ஏர் ஆசியாவின் வேறு விமானம் மாற்றப்பட்டு, அதிகாலை 3.30 மணியளவில் மீண்டும் திருச்சிக்கு புறப்பட்ட விமானம் மலேசிய நேரப்படி இன்று காலை 7.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.








