ஈப்போ, ஜனவரி.10-
தெலுக் இந்தானில் சட்டவிரோத கிரிப்டோ சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட சோதனையில் 41 இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்றிரவு தெலுக் இந்தானில் மூன்று வெவ்வேறு இடங்களில் இச்சோதனைகள் நடத்தப்பட்டன. முதல் சோதனையில் 24 இயந்திரங்களும், அடுத்தடுத்த சோதனைகளில் முறையே 9 மற்றும் 8 இயந்திரங்களும் என மொத்தம் 41 கிரிப்டோ சுரங்க இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த இயந்திரங்கள் மின்சாரத் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், மின்சார விநியோகத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது.
இச்சோதனையின் போது இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதில் தொடர்புடைய நபர்களைக் கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று ஹிலீர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டாக்டர் பக்ரி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.








