கோலாலம்பூர், பிப்ரவரி.22-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி, சர்ச்சைக்குரிய பங்குரிமை விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி சிறப்புக் குழுவின் முன் விளக்கம் அளித்துள்ளார். அஸாம் பாக்கி பங்குகளைக் கைவசம் வைத்திருந்தது தொடர்பான ஒழுங்குமுறை குறித்தும் விதிமுறைகளின் இணக்கம் குறித்தும் இந்தச் சிறப்புக் குழு தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.
சட்டத்துறைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் டுசுகி மொக்தார் தலைமையிலான இந்த ஆய்வுக் குழு, விசாரணையை முழுமைப்படுத்துவதற்காக மேலும் பல சாட்சிகளை அழைக்கத் திட்டமிட்டுள்ளதோடு, இந்த விவகாரத்தில் ஏதேனும் சட்ட மீறல்கள் நடந்திருப்பது உறுதிச் செய்யப்பட்டால் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது. முன்னதாக, நிதிச் சேவை நிறுவனம் ஒன்றில் தான் வாங்கிய 800 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான பங்குகள் அனைத்தும் வெளிப்படையான முறையில் நடைமுறைகளைப் பின்பற்றியே வாங்கப்பட்டதாகவும், அவை ஏற்கனவே முறையாக அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் அஸாம் பாக்கி விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








