புத்ராஜெயா, ஆகஸ்ட்.22-
மலேசிய தற்காப்பு உளவுத்துறையின் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டது தொடர்பில் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அச்சம் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் நாட்டின் தேசிய பாதுகாப்பு அம்சங்களை மறுபரிசீலனை செய்யுமாறு தற்காப்பு அமைச்சுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
மலேசிய தற்காப்பு உளவுத்துறையில் பணியாற்றி வரும் இரண்டு உளவுத்துறை அதிகாரிகள், அண்மையில் தென் மாநிலத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் கைது செய்யப்பட்ட 10 பேரில் அடங்குவர்.
கைது செய்யப்பட்டுள்ள 10 பேரில் இருவர் தற்காப்பு அமைச்சின் உளவுத்துறையில் முக்கிய அதிகாரிகளாகப் பணியாற்றி வந்தவர்கள் ஆவர்.
இருவரின் கைது, தேசிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தமது கவலையைத் தெரிவித்துள்ளார் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ காலிட் நோர்டினுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.








