கோலாலம்பூர், ஆகஸ்ட்.16-
மலேசிய மக்களின் பாதுகாப்புக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் வேளையில் நாட்டில் சட்டத்தை மீறும் அந்நிய நாட்டவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கையாளுவதில் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அண்மைய காலங்களாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்நிய நாட்டவர்கள் சம்பந்தப்பட்ட சட்டத்தை மீறிய செயல்களை உள்துறை அமைச்சு கடுமையாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்நிய நாட்டவர்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு செயலும் நாட்டின் நடப்புச் சட்டங்களுக்கு ஏற்ப விசாரணை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று தமது முகநூலில் வெளியிட்ட செய்தியில் சைஃபுடின் உத்தரவாதம் அளித்துள்ளார்.








