கூலிம் ஹைடெக் பார்க் பகுதியில் உள்ள தனியார் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே ஊடகவியலாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டாத்தோ அட்ஸ்லி அபு ஷா விளக்கம் அளித்துள்ளார்.
"இந்தக் கைது நடவடிக்கை ஊடகவியலாளர்களுக்கு எதிரானது அல்ல. தனியார் நில உரிமையாளர் அளித்த புகாரின் பேரிலேயே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம். ஒரு தனியார் நிலப்பகுதிக்குள் அனுமதி இன்றி எட்டு வாகனங்கள் நுழைவதை எவ்விதத்தில் அனுமதிக்க முடியும்?" என்று டாத்தோ அட்ஸ்லி அபு ஷா கேள்வி எழுப்பினார்.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி, கோலாலம்பூரிலிருந்து வந்த ஒரு குழுவினர் சம்பந்தப்பட்ட தனியார் நிலத்திற்குள் நுழைந்து, அங்கு பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கண்டறிய முயற்சி செய்துள்ளனர். இது குறித்து நில உரிமையாளர் புகார் அளித்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று திசைகள் தொடர்பு கொண்ட போது டாத்தோ அட்ஸ்லி அபு ஷா இதனை தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவரான டத்தோ கலைவாணர் மற்றும் தினத்தந்தி இணைய ஊடகச் செய்தியாளர் காளிதாஸ் சுப்பிரமணியம் ஆகியோரும் அடங்குவர்.
"ஊடகவியலாளர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஒரு இடத்திற்குச் செல்லும் முன் அச்செயல் சட்டப்பூர்வமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எதையும் ஆராயாமல் மற்றவர்களைப் பின்தொடரக் கூடாது" என்றும் டத்தோ அட்ஸ்லி அபு ஷா அறிவுறுத்தினார்.
கைது செய்யப்பட்டவர்களை ஜாமீனில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நாளை செவ்வாய்க்கிழமை குற்றவியல் சட்டம் 447 பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் சாத்தியம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.








