புத்ராஜெயா, பிப்ரவரி.11-
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காஜாங், கம்போங் பாரு சுங்கை சுவாவில் தனது பார்வையற்ற கணவரைத் தம்பியுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த கூட்டரசு நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்ட 33 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதிச் செய்துள்ளது.
நீதிபதி Rhodzariah Bujang தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு, 49 வயதான எஸ். அஞ்சலை தேவி மற்றும் அவரது தம்பி 45 வயதான விஜயா ஆகியோருக்கு எதிரான சூழ்நிலை ஆதாரங்கள் அவர்கள் குற்றவாளிகள் என்பதைத் தெள்ளத் தெளிவாக நிரூபிப்பதாகக் கூறி இந்தத் தீர்ப்பை வழங்கியது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் தேதி தங்கள் வீட்டில் 59 வயதான தேவராஜூ என்பவரைக் கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆரம்பத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்ததாக அஞ்சலை தேவி நாடகமாடிய போதிலும், சொத்து விவகாரம் காரணமாகவே இந்தக் கொலை நடந்ததாகப் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இத்தீர்ப்பின்படி, 50 வயதிற்கு உட்பட்டவர் என்பதால் விஜயாவிற்கு சிறைத் தண்டனையுடன் 10 பிரம்படித் தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளன, பெண் என்பதால் அஞ்சலை தேவிக்கு பிரம்படித் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.








