கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-
கோலாலம்பூர், புடு, ஜாலான் யியூவில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரரைக் கத்தியால் குத்தி காயத்தை ஏற்படுத்தி நபர், தன் வசம் போதைப்பொருள் வைத்திருந்துள்ளார் என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டான் ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்தார்.
கடமையில் இருந்த அந்த போலீஸ்காரர், தன்னை அணுகி சோதனைச் செய்வதை விரும்பாத 56 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி, ஆவேசமாக செயல்பட்டுள்ளார் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அயோப் கான் குறிப்பிட்டார்.
வயிற்றில் ஆழமான கத்திக்கு குத்துக் காயத்திற்கு ஆளாகி செராஸ், சான்சலர் துவாங்கு மூரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புடு போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரரை இன்று நேரில் சென்று சந்தித்து, நலம் விசாரித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் துணை ஐஜிபி மேற்கண்டவாறு கூறினார்.
ஏற்கனவே பல்வேறு குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ள அந்த சந்தேகப் பேர்வழி, தற்போது தடுத்து வைக்கப்பட்டு 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் 39 A மற்றும் கொலை முயற்சி சட்டம் 307, 186 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அயோப் கான் குறிப்பிட்டார்.








