கிள்ளான், செப்டம்பர்.25-
கிள்ளான், பூலாவ் இண்டா, தொழிற்பேட்டைப் பகுதியில் சிலாங்கூர் மாநில குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் 662 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த தொழிற்பேட்டைப் பகுதியில் வேலை செய்து வந்த ஆயிரத்து 132 வெளிநாட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாக சிலாங்கூர் மாநில இயக்குநர் கைருல் அமினுஸ் கமாருடின் தெரிவித்தார்.
பிடிபட்டவர்களில் பெரும்பகுதியினர் வங்காளதேசப் பிரஜைகள் ஆவர். மொத்தம் 545 பேர் கைது செய்யப்பட்டனர். தவிர மியன்மாரைச் சேர்ந்த 35 பேரும், நேப்பாளத்தைச் சேர்ந்த 24 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 10 பேரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர்.
குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக 662 பேர் கைது செய்யப்பட்டதாக கைருல் அமினுஸ் குறிப்பிட்டார்.








