அலோர் ஸ்டார், ஜூலை.23-
மக்களுக்கான ரொக்க உதவித் தொகை மற்றும் பெட்ரோல் விலையைக் குறைத்தல் முதலிய சலுகைகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்த போதிலும், இது, வரும் ஜுலை 26 ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூரில் நடத்தப்படவிருக்கும் துருன் அப் பேரணியை பாதிக்கச் செய்யாது என்று கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனூசி முகமட் நோர் தெரிவித்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பானது, பேரணியில் மக்கள் திரள்வதைத் தவிர்க்கும் நோக்கத்தைக் கொண்டது என்பதுடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூட்டைத் தணிக்கச் செய்யும் முயற்சியாகும் என்று பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநருமான சனூசி கூறினார்.
பிரதமரின் இந்த உதவித் திட்டங்கள் மீதான அறிவிப்பு, ஆக்கப்பூர்வமானது என்ற போதிலும் மடானி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு களமாக அமையவிருக்கும் இந்தப் பேரணியில் மக்கள் கூடுவதை ஒரு போதும் தடுக்காது என்று சனூசி குறிப்பிட்டார்.








