இன்று மார்ச் 23-ஆம் தேதி, மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர்-இன் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு ஜோகூரில் பல்வேறு வகையில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிகழ்வானது பாரம்பரிய அரச மரபை மட்டும் அல்லாது, சீர்திருத்தம், பொறுப்புணர்வு மற்றும் சமூக ஒற்றுமையை முன்னிறுத்தும் தேசிய அடையாளமாகவும் மாறியுள்ளது.
தற்போது மலேசியாவின் 17-வது மாமன்னரான சுல்தான் இப்ராகிம், தனது ஆட்சிக்காலத்தில் ஊழலுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் அவர் வலியுறுத்தி வருகின்றார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு மாமன்னராக ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து, அரசு அதிகாரிகளுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்து, ஊழலில் ஈடுபடுவோர் “நாட்டின் துரோகிகள்” என விமர்சித்துள்ளார்.
மேலும், பதவியேற்பதற்காக மட்டும் தலைநகரத்திற்கு வரவில்லை என்றும் ஊழலில் ஈடுபட்டவர்களை “வேட்டையாட” வந்துள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இக்கடுமையான செய்தி காவல்துறை, குடிநுழைவுத் துறை, சுங்கத் துறை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற சட்ட அமலாக்க மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கும் விரிவடைந்துள்ளது.
சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளிலேயே நேர்மை முதலில் இருக்க வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
தேசிய அளவில் தனது பொறுப்புகளை நிறைவேற்றியபோதிலும், ஜோகூர் மாநிலத்தில் நடைபெறும் வளர்ச்சிகளையும் தொடர்ந்து நெருக்கமாகக் கண்காணித்து வருகிறார்.
மேலும், ஊழல் வழக்குகளை விரைவாக தீர்க்க கட்டமைப்பு மாற்றங்களையும் அவர் முன்வைத்துள்ளார்.
வேகமாக விசாரணை நடைபெறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தல் மற்றும் அனுபவம் மிக்க நீதிபதிகளை நியமித்தல் போன்ற பரிந்துரைகளும் அவற்றில், அடங்கும்.
கடந்த 1958-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி பிறந்த சுல்தான் இப்ராகிமிற்கு, கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி இஸ்தானா பெசார் அரண்மனையில் முடிசூட்டு விழா நடைபெற்றது.
ஜோகூர் மாநிலத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இது பார்க்கப்பட்டது.








