மலேசியாவில் வாழும் தமிழ் பேசும் வெளிநாட்டுவாழ் இந்தியர்களை ஒருங்கிணைத்து, தமிழ் மொழி, கலை மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் தமிழ் கலை கலாச்சார சங்கத்தின் முப்பெரும் விழாவும், புதிய இலட்சினை வெளியீட்டு விழாவும் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் முன்னாள் தலைவர் ராஜாகண்ணன் முன்னுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கல்வியாளரும் தொழிலதிபருமான சன்சைன் எஜுகேஷனல் குரூப் (எம்) எஸ்டிஎன். பிஎச்டி., சன்கிட்ஜ் இன்டர்நேஷனல் எஜுகேஷன் குரூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தோற்றுநரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஆர். வி. ஷ்யாம் பிரசாத் சங்கத்தின் புதிய தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ கோகிலன் பிள்ளை, சங்கத்தின் புதிய இலட்சினையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, புதிய நிர்வாகக் குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தின் கவுன்சிலர் திருமதி விஜயலட்சுமி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹரிஹர சுதன் வரவேற்புரை ஆற்றினார். புதிய தலைவர் டாக்டர் ஆர். வி. ஷ்யாம் பிரசாத் தனது சிறப்புரையில், “உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழன் என்ற அடையாளமும், பெருமையும் நம் இதயத்தில் இருக்க வேண்டும். மலேசியத் தமிழர்களை ஒரே குடையின்கீழ் இணைப்பதே எங்களின் நோக்கம்” எனக் குறிப்பிட்டார். மேலும், சங்கம் பொருளாதார முன்னேற்றம் மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்காகச் செயல்படும் என்றும் உறுதியளித்தார்.

விழாவில் சிலம்பம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. கோபியோ மலேசியா தலைவர் குணா, தொழிலதிபர்கள் டத்தோ கோபாலகிருஷ்ணன், முத்துவேல், திருமதி ஷோபனா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் விழ சிறப்பித்தனர். சங்கத்தின் செயலாளர் வினோத் எதிர்கால நோக்கங்கள் குறித்துப் பேச, துணைத் தலைவர் அல்டாஃப் நன்றியுரை வழங்கினார்.

“தமிழ் மொழி, மரபு, பண்பாடு மற்றும் ஒற்றுமையைக் காப்பதே வருங்கால தலைமுறைக்கு நாம் வழங்கும் மிகப் பெரிய பாரம்பரியச் சொத்து” என்ற தலைவரின் உணர்வுபூர்வமான நிறைவுரையுடனும், சுவையான தேநீர் விருந்துடனும் இவ்விழா இனிதே நிறைவடைந்தது.













