May 5, 2026
Thisaigal NewsYouTube
செராஸ் சாலை வன்முறை: ஓய்வு பெற்ற முதியவரைத் தாக்கிய நபருக்கு  2 நாட்கள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

செராஸ் சாலை வன்முறை: ஓய்வு பெற்ற முதியவரைத் தாக்கிய நபருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்

Share:

காஜாங், பிப்ரவரி.09-

காஜாங், பத்து 9, செராஸ், பெக்கான் சந்தேக்ஸ் அருகே நடந்த ஒரு சிறிய வாகன விபத்தைத் தொடர்ந்து, 69 வயது ஓய்வு பெற்ற முதியவரைத் தாக்கி மிரட்டியதாக 52 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலையின் போக்குவரத்து சிக்னல் அருகே தான் தாக்கப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட முதியவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.49 மணிக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் கூறுகையில், இருவரின் வாகனங்களும் லேசாக மோதிக் கொண்டதே இந்த மோதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

முதியவரின் புகாரைத் தொடர்ந்து, நேற்று இரவு 11.30 மணியளவில் காஜாங்கில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் விசாரணைக்கு உதவும் பொருட்டு இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி நாஸ்ரோன் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தையோ அல்லது புலனாய்வு அதிகாரி சர்ஜன் கணேசன் ராமச்சந்திரனுடன் 012-608 9180 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Related News