கோலாலம்பூர், ஆகஸ்ட்.16-
மலேசிய தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங்கைத் தலைகீழாகக் கட்டி, சிறுமைப்படுத்தப்படுவது மற்றும் அவமதிக்கப்படுவதை ஒரு போதும் தம்மால் சகிக்துக் கொள்ள முடியாது என்றும் அதனை மாண்புறச் செய்வதே தம்முடைய தலையாயக் கடமையாகும் என்றும் வீர வசனம் பேசும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே, எஸ்பிஎம் தேர்வு முடிவு தொடர்பான செய்தித் தொகுப்பில் மலேசியக் கொடியைத் தவறாகச் சித்தரித்த கல்வி அமைச்சு மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்று சமூக போராட்டவாதி சித்தி காசிம் கேள்வி எழுப்பினார்.
தேசியக் கொடி தலைகீழாகக் கட்டப்பட்டதைத் பார்க்க தம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று துடித்து எழுந்துள்ளதாகக் கூறும் அந்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர், கல்வி அமைச்சு செய்த தவற்றுக்கு புத்ராஜெயாவில் ஏன் படையினருடன் திரளவில்லை என்றும், கண்டும் காணாமல் ஏன் விட்டார் என்றும் ஒரு வழக்கறிஞரான சித்தி காசிம் வினவினார்.
பினாங்கு, கெப்பாளா பாத்தாஸில் தேசியக் கொடியைத் தவறாகக் கட்டியதாகக் கூறப்படும் ஒரு சீனக் கடைக்காரருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அக்மால், அந்த துணிச்சலை, புத்ராஜெயாவில் உள்ள கல்வி அமைச்சு முன் காட்டியிருக்க வேண்டியதுதானே என்று தாம் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் சித்தி காசிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இனத்துவேஷத் தன்மையில் செயல்படும் அக்மாலுக்கு எதிராக நிந்தனைச் சட்டம் பாய வேண்டும். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும் என்று சித்தி காசிம் வலியுறுத்தியுள்ளார்.








