Apr 26, 2026
Thisaigal NewsYouTube
புதிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் 'கார்ப்பரேட் மாஃபியா' புகார்களை விசாரித்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சர் கோபிந்த் சிங் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

புதிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் 'கார்ப்பரேட் மாஃபியா' புகார்களை விசாரித்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சர் கோபிந்த் சிங் வலியுறுத்தல்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.26-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக மே 13 முதல் பதவியேற்கவிருக்கும் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான், முக்கிய சீர்திருத்தங்களை அமல்படுத்தி ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டுள்ளார். ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, "கார்ப்பரேட் மாஃபியா" நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளைக் கையாள்வதும், முன்னாள் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி சம்பந்தப்பட்ட பங்குதாரர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் புதிய தலைவரின் உடனடி முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, விசாரணைகளின் போது சில அதிகாரிகள் பெருநிறுவன சூழ்ச்சிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள் ஆணையத்தின் நம்பகத்தன்மையைப் பாதிப்பதால், அவை எந்தவிதப் பாரபட்சமுமின்றி தெளிவான காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் தலைவர் அஸாம் பாக்கியின் பங்கு விவகாரம் தொடர்பாகச் சட்டத்துறைத் தலைவர் தலைமையிலான குழு ஏற்கனவே அமைச்சரவையில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ள நிலையில், இந்த நீடித்தப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பொறுப்புணர்வும் வெளிப்படைத்தன்மையும் மிக முக்கியமானவை என்பதால், புதிய தலைவரின் தொடக்கக் கட்ட நடவடிக்கைகள் உண்மையான சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்பதைப் பொதுமக்களுக்குத் தெளிவாகப் புலப்படுத்தும் விதமாக அமைய வேண்டும் என அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News