குவாந்தான், ஜூலை.15-
மலேசியாவில் எல்லா நிலைகளிலும் பின் தள்ளப்பட்ட ஒரு சமூகமாகக் கருதப்பட்ட பூர்வகுடி மக்கள், இன்று எல்லா துறைகளில் முந்திச் செல்லும் சமூகமாக மாறிக் கொண்டு வருகின்றனர்.
ஓராங் அஸ்லி என்று அழைக்கப்படும் பழங்குடி மக்களில் ஜக்குன் சமூகத்தைச் சேர்ந்த முதலாவது மாணவி, பிரிட்டன், மான்செஸ்டர் பல்லைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் உயர்க்கல்வி மேற்கொள்ள இடம் கிடைத்துள்ளது.
கல்வி ஒன்றே வாழ்வியலின் உயர்வு என்பதை அறிந்து கொண்ட சமூகமாக மாறி வரும் ஓராங் அஸ்லி மக்களில், ஜக்குன் சமூகத்தைச் சேர்ந்த 20 வயது ரோஸியானா டான் பெங் ஹாய் என்ற மாணவி, 2024 ஆம் ஆண்டு எஸ்டிபிஎம் தேர்வில் 4.0 CGPA மதிப் பெண்களைப் பெற்று சாதனைப் படைத்தார்.
ஏழ்மையில் உழன்ற அந்த பழக்குடி மாணவி, ஒரு பொருளாதார மேதையாக வேண்டும் என்பது அவரின் லட்சியக் கனவாகும். அதற்குத் தூபம் போட்டது போல் எஸ்டிபிஎம் தேர்வில் மிகச் சிறந்த அடைவு நிலையைப் பெற்றதால் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இட வாய்ப்பு கிட்டியுள்ளது.
இந்த வாய்ப்பு, ஜக்குன் சமூகத்தின் இளைய தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டலாக அமையும் என்று அந்த ஓராங் அஸ்லி மாணவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








