கூச்சிங், நவம்பர்.08-
சரவாக் மாநிலம் மிரியில் உள்ள சுங்கை கோல துதோ ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என்று நம்பப்பட்ட கப்பல் பணியாளர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான பிரஷாந்த் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த ஆடவர், கம்போங் கோல துதோ பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை ஆற்றில் குளிக்கச் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் கப்பலுக்குத் திரும்பாததால், அது குறித்து மருடி போலீஸ் தலைமையகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், முதலை ஒன்று இடது கையைக் கவ்விச் சென்ற நிலையில், அவரது சடலத்தை மீட்டுள்ளனர்.
அந்த ஆடவர் நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது முதலை தாக்குதலுக்கு உள்ளானாரா? என்பது குறித்து பிரேதப் பரிசோதனையில் தெரிய வரும் என்று சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரது சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








