Jun 25, 2026
Thisaigal NewsYouTube
"மலாய்க்காரர்களிடையே பிளவு ஏற்பட்டதில் மகாதீருக்கு முக்கியப் பங்கு உண்டு" - முக்கிய தலைவர்கள் கருத்து
அரசியல்

"மலாய்க்காரர்களிடையே பிளவு ஏற்பட்டதில் மகாதீருக்கு முக்கியப் பங்கு உண்டு" - முக்கிய தலைவர்கள் கருத்து

Share:

மலாக்காரர்களின் ஒற்றுமையின்மைக்கு அவர்களே காரணம் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறிய கருத்துக்கு மலாய் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மூன்று தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

மகாதீர் அம்னோ கட்சியில் இருந்து பிரிந்து பெர்சத்து என்ற கட்சியை தொடங்கியதையும், பின்னர் அதிலிருந்தும் விலகி பெஜுவாங் என்ற மற்றொரு கட்சியை உருவாக்கியதையும் அமானா இளைஞர் பிரிவு தலைவர் ஹஸ்பி மூடா சுட்டிக்காட்டியுள்ளார்.

மகாதீர் உண்மையில் ஒற்றுமையை விரும்பினால், அதை நிரூபிக்க அவர் மீண்டும் அம்னோ கட்சிக்கு திரும்ப வேண்டும் என்றும் ஹஸ்பி வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, மலாய் கட்சிகள் தங்கள் அரசியல் ஆதிக்கத்தை இழப்பதற்குத் தானே காரணம் என்பதை மகாதீர் உணரவில்லை என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஜர்காஷி குறிப்பிட்டுள்ளார்.

மலாய் இனத்தை ஒன்றிணைப்பதில் மகாதீர் உண்மையான அக்கறை கொண்டிருந்தால், அவர் தனது அகந்தையை ஒதுக்கி வைத்துவிட்டு, அம்னோவின் “ரூமா பாங்சா” முன்னெடுப்பில் இணையுமாறும் புவாட் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் ரசாலி இட்ரிஸ் கூறுகையில், மகாதீர் கூறுவது கசப்பான உண்மை என்றும், இந்தத் தோல்விக்கு மலாய்க்காரர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகப் பழிசுமத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மாறாக, அதிகாரப் போட்டிகளில் ஈடுபட்டுப் பின்னர் புதிய கட்சிகளைத் தோற்றுவித்த தலைவர்களையே அதற்குக் குற்றம்சாட்ட வேண்டும் என்றும் ரசாலி குறிப்பிட்டுள்ளார்.

Related News