கோலாலம்பூர், டிச. 13-
அரசாணை உத்தரவு மற்றும் மன்னிப்பு வாரிய விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிராக தாம் பழிவாங்கும் உணர்ச்சியைக் கொண்டிருக்க முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார்.
நஜீப் விவகாரத்தில் தம்மை சாடி வருகின்றவர்கள், போதுமான அறிவு முதிர்ச்சியைக்கொண்டிருக்கவில்லை என்பதையும் பிரதமர் சாடினார்.
நாட்டின் பிரதமர் என்ற முறையில் . நஜீப் விவகாரத்தில் தமது பொறுப்பை உணர்த்திருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.
நாட்டின் பிரதமராக துன் மகாதீர் முகமது இருந்த போது முதல் முறையாக தாம் சிறைக்கு அனுப்பப்பட்டதாக அன்வார் நினைவுகூர்ந்தார். அதன் பின்னர் நஜீப் பிரதமராக இருந்த போது, தாம் இரண்டாவது முறையாக சிறைக்கு அனுப்பப்பட்டதாக அன்வார் விவரித்தார்.
தற்போது நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பு வகித்த போதிலும் அவர்களுக்கு எதிராக பழிவாங்கும் உணர்ச்சியை தாம் கொண்டிருக்க முடியாது, அதற்கு இடம் அளிக்கவும் இயலாது . அனைவருக்கும் தாம் நியாயமாக செயல்பட வேண்டும் என்பதையும் அன்வார் தெளிவுபடுத்தினார்.
நஜீப் மேல்முறையீடு என்பது ஒவ்வொரு கைதிக்கும் வழங்கப்படும் தனிப்பட்ட உரிமையாகும். அதில் தாம் தலையிடவோ, அது குறித்து வியாக்கியானம் செய்யவோ, கருத்துக் கூறவோ இயலாது என்பதையும் பிரதமர் விளக்கினார்.








