புத்ராஜெயா, நவ. 25-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மக்கள் எதிர்நோக்கி வரும் சில முக்கியப்பிரச்னைகள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கனுடன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வீரப்பன் விவாதித்துள்ளார்.
இந்த சந்திப்பு கடந்த நவம்பர் 21 ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் துறையில் நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை நடைபெற்ற இந்த சந்திப்பில் நெகிரி செம்பிலான், தம்பினில், மின் சுடலை நிர்மாணிக்கும் திட்டம், பகாவ், செயிண்ட் ஹெலியர் தோட்டத்தமிழ்ப்பள்ளிக்கான இணைக்கட்டிடம் நிர்மணிப்பு, பகாவ், பஹாவ் தோட்ட தமிழ்ப்பள்யின் நிலை, நடப்பு நிலவரம் மற்றும் குப்பைகளை அகற்றும் பிரச்னை முதலியவை குறித்து சண்முகத்துடன் தாம் விவாதித்தாக வீரப்பன் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் மாநிலம் உட்பட மாநிலங்களில் மின்சுடலையை நிர்மாணிப்பதற்கு 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்த்ததை வரவேற்ற வீரப்பன், தம்பினில் மின்சுடலை நிர்மாணிப்பது தொடர்பில் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து சில பரிந்துரைகள் தமது அலுவலகத்தில் வழங்கப்பட்டு இருப்பது குறித்தும் விளக்கினார்.
தம்பினில் மின்சுடலை கட்டப்படுவதற்கான அவசியம் குறித்தும் வீரப்பன் தெளிவுபடுத்தினார்.
இதேபோன்று பகாவ், செயிண்ட் ஹெலியர் தோட்டத்தமிழ்ப்பள்ளிக்கான இணைக்கட்டம் கட்டப்படுவதற்கான தேவைகள், பகாவ், பஹாவ் தோட்ட தமிழ்ப்பள்யின் நிலை, புதிய கட்டடம் கட்டப்படுவதற்கான அங்கீகரித்தை பெற்றது மற்றும் அதன் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் சண்முகத்திடம் தாம் விளக்கியதாக வீரப்பன் குறிப்பிட்டார்.








