மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களை முன்னெடுத்து தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துமாறு பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களையும், தேர்தல் கேந்திரங்களையும் மலாக்கா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ வீரா அட்லி ஸஹாரி கேட்டுக் கொண்டார்.
தேர்தல் பிரச்சாரம் நான்காவது நாளை எட்டியுள்ள வேளையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை கண்டறியும் அதேவேளையில் பொது நிதி நிர்வகிப்பு முறை, கிடப்பில் உள்ள பிரச்னைக்குரிய திட்டங்களை கையாளும் முறை, மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை சமாளிப்பதற்கு உதவும் திட்டங்கள் மற்றும் மலாக்கா மாநில மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஊராட்சி மன்றங்களுடன் கையாளும் முறை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு அட்லி ஸஹாரி வலியுறுத்தினார்.
மலாக்காவில் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் மையத்தில் மலாக்கா ரூமா கித்தா கருப்பொருளில் அனுதினமும் நடைபெறும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் அட்லி ஸஹாரி இந்த வேண்டுகோளை விடுத்தார்.
மலாக்காவில் உள்ள 28 தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் போட்டியிடும் 24 தொகுதிகளில் ஊராட்சி மன்றங்கள் தொடர்புடைய மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு வருகின்ற மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் வெற்றிப் பெற வேண்டிய அவசியத்தை வாக்காளர்களுக்கு வலியுறுத்துமாறு அட்லி ஸஹாரி கேட்டுக் கொண்டார்.
இந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் மலாக்கா மாநில ஜசெக தலைவர் கூ பொயே தியோங், பிகேஆர். கட்சியின் மாநில தலைவர் மன்ற வியூக இயக்குநர் ஜொனாதன் வேலா உட்பட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.








