மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூய்மையான, வெளிப்படையான, திறமையான நிர்வாகத்தை உருவாக்க மூன்று முக்கியக் கொள்கைகளையும், மக்களுக்கான 12 இலக்குகளையும் பக்காத்தான் ஹராப்பான் தனது தேர்தல் கொள்கை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
'மலாக்கா நமது இல்லம்' என்ற கருப்பொருளில் அமைந்துள்ள இந்தத் தேர்தல் அறிக்கை, மக்கள் பணத்தைக் கையாடும் 'சக்காவ்' கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
பக்காத்தான் ஹராப்பானின் மலாக்கா மாநிலத் தலைவர் அட்லி ஸஹாரி தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்வில், உயர்கல்வி துணை அமைச்சர் அடாம் அட்லி, மலாக்கா மாநில ஜசெக தலைவர் கூ பொயே தியோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூன்று முக்கியக் கொள்கைகளில் முதலாவதாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்மார்ட் மலாக்காவை உருவாக்கி, அரசுச் சேவைகளை விரைவாகவும் வெளிப்படையாகவும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, ஊராட்சி மன்றங்களின் ஒப்பந்தப் பணிகளில் 30 விழுக்காட்டை இளைஞர்களுக்கு ஒதுக்கி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்க வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, 2032ஆம் ஆண்டுக்குள் 2 கோடியே 50 லட்சம் சுற்றுலாப் பயணிகளை மலாக்காவுக்கு ஈர்த்து, அனைத்துலகச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், வீடமைப்பு, தரமான வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், போக்குவரத்து வசதி, சமய நிறுவனங்கள், நில உரிமை, மக்கள் நலன் மற்றும் சமூக ஒற்றுமை உள்ளிட்ட 12 அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்தத் தேர்தல் அறிக்கை, மக்களின் கருத்துகளையும் தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக அட்லி ஸஹாரி தெரிவித்துள்ளார்.








