மலாக்கா மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், கைவிடப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்று பக்காத்தான் ஹராப்பான் உறுதியளித்துள்ளது. இதில் மலாக்கா மோனோரயில் திட்டமும் அடங்கும்.
மலாக்கா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அட்லி ஸஹாரி கூறுகையில், பொதுமக்களின் வரிப்பணம் எவ்வளவு செலவிடப்பட்டது, அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, கைவிடப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்த யார் பொறுப்பேற்க வேண்டும் என்பவை வெளிப்படையாக ஆராயப்படும் என்றார். புதிய முதலீடுகள் மூலம் திட்டங்களைத் தொடர்வதா அல்லது முற்றாகக் கைவிடுவதா என்பதும் முடிவு செய்யப்படும்.
மோனோரயில் திட்டத்திற்காக 16.5 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்ட நிலையில், அதன் சேவை 2020ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இத்தகைய திட்டங்கள் மலாக்காவின் சுற்றுலா வளர்ச்சி, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அட்லி சுட்டிக் காட்டினார்.
மேலும், அரசாங்க உதவிகள் வெளிப்படையாகவும், அதிகாரத்துவத் தடைகளின்றியும் மக்களைச் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.








