அரசாங்கத்துடன் நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தமான சிஎஸ்எவில் கையெழுத்திடுவதன் மூலம் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பெற வேண்டும் என்ற நோக்கம் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு இல்லை என அதன் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிஎஸ்எ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது, எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட முடிவு என்றும், ஒப்பந்தத்தில் பங்கேற்றவர்கள் பெரிக்காத்தான் கூட்டணியின் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடாதவர்கள் என்றும் தக்கியுடின் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், பெர்சாத்து கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அக்கட்சியிலிருந்து விலகிய ஆறு முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் மூடா கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் ஆகியோர் சிஎஸ்எ ஒப்பந்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
மேலும், சிஎஸ்எ தொடர்பான பேச்சுவார்த்தைகளிலோ அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நடவடிக்கையிலோ பெரிக்காத்தான் கூட்டணி எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை என்றும் தக்கியுடின் தெரிவித்துள்ளார்.








