மலாக்கா மாநில தேர்தலில் ரிம் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர் எஸ்மா எஸ்ரின் ஹுசேன், தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ கைதீரா அபு ஸஹாரை நேரடியாக எதிர்கொள்கிறார்.

இன்று ஜாசின், லிபாட் காஜாங்கில் உள்ள டேவான் எம்பிஜேவில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது, தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தலைமையில் திரண்ட கட்சித் தலைவர்கள், ஆதரவாளர்கள் புடைசூழ எஸ்மா எஸ்ரின் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அப்போது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய யுனேஸ்வரன், மலாக்கா தேர்தலில் தேசிய முன்னணியைப் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்றும், ரிம் தொகுதியில் போட்டியிடும் எஸ்மா எஸ்ரினை Esma பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

எஸ்மா எஸ்ரின், சமூகநலப் பணிகள், மகளிர் தலைமைத்துவம் மற்றும் பிகேஆர் கட்சியின் மாநில, தொகுதி அளவிலான அமைப்புகளில் அனுபவம் பெற்றவர் என்றும், அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி ரிம் தொகுதி மக்களின் தேவைகளுக்காகப் பணியாற்றுவார் என்றும் யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்த வேட்புமனுத் தாக்கலின்போது முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா, சையிட் இப்ராஹிம் சையிட் நோ, அக்மால் நாசீர் மற்றும் ஜோகூர், மலாக்கா மாநிலங்களைச் சேர்ந்த பிகேஆர் தலைவர்களும் எஸ்மா எஸ்ரினுக்கு ஆதரவாகக் கலந்து கொண்டனர்.








